சென்னையில் இருந்து சேலம் சென்ற சொகுசு பஸ்சில் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன்; ஒரு மாதத்திற்கு பின் போக்சோ சட்டத்தில் கைது

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் காட்டுக்கொட்டாயை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவியை சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவியை தினேஷ்குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார். அவரது பெற்றோர், ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுத்தனர். அதில், மகளை ஆசை வார்த்தை கூறி தினேஷ்குமார் என்பவர் கடத்திச் சென்றுவிட்டார் எனக்கூறியிருந்தனர். போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், தினேஷ்குமாரையும் தேடி வந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சிறுமியை போலீசார் மீட்டு அவரிடம் விசாரித்தனர். இதில், திருமணம் செய்து கொள்வதாக காதலன் தினேஷ்குமார் ஆசைவார்த்தை கூறி மாணவியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். வண்டலூரில் உள்ள நண்பர்களின் உதவியுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தபோது, அவருக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்து திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். இதனால் மீண்டும் ஆத்தூருக்கு சென்னை-சேலம் தனியார் சொகுசு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். சிலிப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர்.

ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் அவர்கள் வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் வந்தபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பஸ் அங்கேயே நின்றுள்ளது. அப்போது சிறுமியை பஸ்சில் வைத்தே தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளார், என்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று காலை, வளையமாதேவி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த தினேஷ்குமாரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

Related Stories: