உதவி செய்வது போல் நடித்து நகைச்சுவை நடிகரிடம் ரூ.1 லட்சம் மோசடி; வாலிபர் கைது

சென்னை: உதவி செய்வது போன்று நடித்து நகைச்சுவை நடிகரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, கிறையில் அடைத்தனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி. அய்யப்பன்தாங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் போண்டா மணியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவர், போண்டாமணியின் ரசிகர் என கூறி மருத்துவமனைக்கு சென்றார். உடல் நலம் விசாரிப்பது போல பழகி வந்தார். அவருக்கு சிறுசிறு உதவிகளையும் செய்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி  போண்டா மணி வீடு திரும்பினார்.

அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் சென்றுள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து, மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவரும் கார்டை வாங்கி கொண்டு புறப்பட்டார். சிறிது நேரத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து மாதவியின் செல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள நகை வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளது. அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். மருந்து வாங்க சென்ற ராஜேஷ் பிரித்தீவும் வீட்டுக்கு வரவில்லை. அப்போதுதான் அவர் ஏமாற்றியது தெரியவந்தது.

புகாரின்பேரில், போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ராஜேஷ் பிரத்தீவ்வை சென்னையில்,  நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தினேஷ், சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல பெயர்களில் பல ஊர்களில் மோசடிகளில் ஈடுபட்டதும், கோவை மாவட்டம் கருமத்தூர், கோவை ரயில்வே போலீஸ் நிலையம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில், குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: