மோடி திறந்து விட்ட சிவிங்கி புலி கர்ப்பம்; குனோ பூங்கா நிர்வாகிகள் பரவசம்

போபால்: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளில் ஒன்று கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய காடுகளில் இருந்த சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன. இந்த வேட்டை விலங்கினத்தை இந்தியாவில் மீண்டும் உருவாக்க, ‘சிவிங்கிப் புலி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதற்காக, நமீபியா நாட்டில் இருந்து  தனி விமானத்தில் 8 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் தனது பிறந்த நாளான 17ம் தேதி பிரதமர் மோடி திறந்து விட்டார்.

இவற்றின் மீது அவர் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில், ஆஷா என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி, கர்ப்பம் தரித்து இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, அவற்றை பராமரிக்கும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் கர்ப்பத்தை உறுதிப்படுத்த மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இளம் வயது சிவிங்கிப் புலியான இது, கர்ப்பம் அடைந்திருப்பது இதுவே முதல்முறை. இது குட்டிகளை ஈன்றால், இந்திய காடுகளில் சிவிங்கி்ப் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories: