சுசீந்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து: பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏராளமானோரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரம் அருகே புதுக்கிராமம் குளக்கரை பகுதியில் உதவி ஆய்வாளர் ராபர்ட்  செல்வ சிங் தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பைக்குகளில் 3 வாலிபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்ததை கண்டனர். உடனே அவர்களை மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குலசேகரன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (19), தேவக்குளம் கண்ணன்பதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), மாங்குளம் நடுத்தெருவை சேர்ந்த வைரவன் (18) என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 1.2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், 3 பேரும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: