ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரிப்பு!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2,425 கோடி அளவு பொதுமக்களிடம் வசூலித்து ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. தமிழகம் முழுவதும் 1.08 லட்சம் பேர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.30 ஆயிரம் வட்டியாக கிடைக்கும் என்ற அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை வசூல் செய்தது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி பல கிளைகளை அமைத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த மே.24-ம் தேதி 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இது தொடர்பான இயக்குனர்கள், நிர்வாகிகள் என 8 பேர் மீது ஆருத்ரா நிறுவனம் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முதற்கட்ட விசாரணையில் 90 ஆயிரம் பேர் இதில் முதலீடு செய்ததாகவும் ரூ.2,125 கோடி மோசடி செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் அதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் தகவல் அனுப்பியும், பெறவுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் மொத்தமாக 1.08 லட்சம் பேர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக ரூ.2,425 கோடி அளவு முதலீடு செய்துள்ளதாகவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ரூ.100 கோடி அளவிற்கு சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் ரூ.150 கோடிக்கு மேல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பு ஒப்படைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது  என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: