சென்னையில் கல்வி நிறுவனங்கள் அருகில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 87 வழக்குகள் பதிவு: 17 கிலோ குட்கா, புகையிலைப்பொருட்கள் பறிமுதல்

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் இதர இடங்களில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17.29 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள், 728 சிகரெட்டுகள் மற்றும் ரூ. 2,800/- ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லாட்டரி விற்பனை செய்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டு 2 ரசீது புத்தகங்கள் மற்றும் ரொக்கம் ரூ.3,240/-பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவும், இளைய சமுதாயத்தினர் இப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும், குட்கா, மாவா புகையிலை பொருட்களை கடத்தி வருபவரக்ள் மற்றும் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர இடங்களில் ஒரு நாள் சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.10.2022) குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக, 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 நபர்கள் கைது செய்யப்பட்டு, 2 கிலோ 740 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 632 சிகரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,550/- பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதர இடங்களில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக 59    வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 59 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ 160 கிராம் குட்கா பாக்கெட்டுகள், 96 சிகரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.250/- பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 நபர்கள் கைது செய்யப்பட்டு,  17 கிலோ 290 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 728 சிகரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,800/- பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து  2 ரசீது புத்தகங்கள் மற்றும் ரொக்கம் ரூ.3,240/- பறிமுதல் செய்யப்பட்டது.

ஆகவே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.

Related Stories: