மும்பை ஏர்போர்ட்டில் ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்: கானா பெண் உட்பட 2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ. 100 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கானா நாட்டு பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பை வந்த பயணி ஒருவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.   

அவரது உடைமைகளை சோதனை செய்ததில், 16 கிலோ ஹெராயின் இருந்தது. இவை பைகளில் தனித்தனி துண்டுகளாக கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பயணியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருக்கும் கானா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சப்ளை செய்வதற்காக 16 கிலோ ஹெராயின் கடத்தப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணை மும்பை அழைத்து வந்து விசாரிக்க உள்ளோம். இவ்வழக்கில் இருவரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: