பொன்னேரி நகராட்சியில் சேறும் சகதியுமாக மாறிய தாலுகா அலுவலக சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால், அங்கு தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அப்பணிகளை விரைந்து முடித்து, அச்சாலையை விரைவில் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார்பு நீதிமன்றங்கள், ஆதார் இ-சேவை மையம், கிளைச் சிறை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை உள்பட பொன்னேரி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இந்த தாலுகா சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கின. எனினும், அப்பணிகள் இதுவரை மெத்தனமாக நடைபெற்று வருகிறது.

தற்போது பருவமழையின் முன்னோட்டமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், தாலுகா சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியே சென்று வரும் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சேற்றில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபட்டு வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது, நடந்து செல்பவர்கள்மீது சேறும் சகதியும் வாரி இறைக்கப்படுகிறது. இதனால் பலரது ஆடைகளில் சேறு அப்பிய நிலையில் வேதனையுடன் கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஆலாடு பகுதி, என்ஜிஓ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. எனவே, இப்பணிகளை துரிதப்படுத்தி முடித்து, சேறும் சகதியுமான தாலுகா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: