சாத்தான்குளம் அருகே பயங்கரம்: சென்னை இரும்புக்கடை ஊழியர் வெட்டிக் கொலை

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பள்ளங்கிணறைச் சேர்ந்த பட்டுராஜ் மகன் ரேவந்த்குமார் (27). திருமணமாகவில்லை. இவருக்கு 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். ரேவேந்த்குமார் சென்னையில் ஒரு இரும்புக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தசரா திருவிழாவுக்காக ரேவந்த்குமார் 2 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சாத்தான்குளத்திற்கு வந்தார். இந்நிலையில் செட்டிகுளத்தை அடுத்த நொச்சிகுளம் விலக்கில் பஸ்-ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் கழுத்து மற்றும் கையில் வெட்டுப்பட்ட நிலையில் ரேவந்த்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இன்று காலை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள், ரேவந்த்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவந்த்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 5 வருடங்களுக்கு முன்பு ரேவந்த்குமாரின் சித்தப்பா கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ரேவந்த்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளங்கிணற்றில் 2 தசரா குழுக்கள் இயங்கி வந்தன.

இந்த குழுக்களுக்கு இடையே பொதுமக்களிடம் காணிக்கை பிரிப்பதில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த குழுக்களிடையேயான மோதலில் ரேவந்த் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தசரா விழாவுக்கு வந்த இடத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதால், நண்பர்களுக்கிடையே போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

மேலும் செட்டிகுளத்தில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த கேமரா பதிவுகளையும் சாத்தான்குளம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: