நாளை புரட்டாசி 3ம் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 36 மணி நேரத்திற்கு பிறகே சுவாமியை தரிசிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம்தேதி தொடங்கி நேற்றுமுன்தினமும் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்தனர். ஆனால் பிரம்மோற்சவம் நிறைவுபெற்று 3 நாட்களாகியும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை இருப்பதால் நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரிகரித்துக்கொண்டே உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் நாளை புரட்டாசி 3ம் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் தொடர்ந்து வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று 72,195 பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 41,071 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.2.17 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சீலா தோரணம் வரை பல கி.மீ. தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 36 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்ய முடியும் என தெரிகிறது. ஏராளமான பக்தர்கள் தங்கும் அறை கிடைக்காமல் திறந்தவெளியில் சாலைகளில் ஆங்காங்கே பனியையும் கண்டுகொள்ளாமல் திரண்டுள்ளனர். இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருமலைக்கு வரும் பஸ்கள் மற்றும் திருமலையில் இருந்து செல்லும் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Related Stories: