ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஆளுநருக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: திருச்சி மாவட்டம்  மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுனரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே  நான் கூறியிருந்தேன். அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான்  இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க  வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories: