மதுரை ரயில் நிலையத்தில் அதிக ரயில்களை கையாள ரூ.2.5 கோடி செலவில் புதிய நடைமேடைகள்

* 325 சதுர மீட்டருக்கு மேற்கூரைகள்

* கட்டுமான பணிகள் தீவிரம்

மதுரை: தென்மாவட்டங்களில் இருந்து பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தில், அதிக ரயில்களை கையாள புதிய நடைமேடைகள் ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. 325 சதுர மீட்டருக்கு மேற்கூரைகள் அமைக்கப்படுகிறது. தவிர, 6வது பிளாட்பாரம் எல்லீஸ்நகர் பாலப்பகுதி அருகே 272 மீட்டருக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. தென்மாவட்டங்களில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் மதுரையும் ஒன்று. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்ைட, கோவை, சென்னை, விழுப்புரம், திருப்பதி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், மதுரை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, பிளாட்பாரம் எண் ஐந்து மற்றும் ஆறு இடையே ஒரு புதிய பிளாட்பாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பிளாட்பாரம் 450 மீட்டர் நீளத்தில் அமைகிறது. இந்த பிளாட்பாரம் நடுவில் 13 மீட்டர் அகலமும், இருபுறமும் இறுதி பகுதியில் 9 மீட்டர் அகலத்திலும் அமைகிறது. இந்த புதிய பிளாட்பாரத்தில் 325 சதுர மீட்டருக்கு மேற்கூரைகள் அமைக்கப்பட இருக்கிறது.மேலும், மேற்கு நுழைவு வாயில் அருகே உள்ள தற்போதைய ஆறாவது பிளாட்பாரம் எல்லீஸ் நகர் பாலப்பகுதி அருகே 272 மீட்டருக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இந்த நீட்டிப்பு செய்யப்படும் பிளாட்பாரம் 5.5 மீட்டர் அகலம் உள்ளதாக அமையும். இதே போல, பிளாட்பாரம் எண் 1, 2, 3, 4 மற்றும் 5 ஆகியவை வடக்கு பகுதியில் முறையே 70, 60 மற்றும் 20 மீட்டர் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய பிளாட்பாரங்கள் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையிலும், டிராலி சூட்கேஸ்களை உருட்டி செல்லும் வகையிலும் கான்கிரீட் தளங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலைய கட்டிடமும், கூடுதலாக புதிய பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

கிரானைட் கற்கள் பதிப்பு

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மதுரையில் 2 மற்றும் 3வது பிளாட்பாரத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது மதுரை ரயில்நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பயணிகளை மிகவும் கவரும் வகையில், அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ரயில்நிலைய வெளிவளாகத்தில், மழைநீரை சேமிக்கும் வகையில், 9 இடங்களில் 115 மழைநீர் சேமிப்பு போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றார்.

விரைவில் சிக்னல்

திருமங்கலம் - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. மேலும் சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெற இருக்கின்றன. இந்த இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து வருகிற டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு நுழைவு வாயிலில் ெரடிமேடு கழிப்பறை

ரயில் நிலைய ேமற்கு நுழைவு வாயில் பகுதியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் சார்பில், ரெடிமேடு கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் 55 இடங்களில் ரெடிமேடு கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையால், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் பயன்பெறுகின்றனர்.

Related Stories: