பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த தலைவர்கள் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மரியாதை

கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த தலைவர்கள் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர்  மாவட்டத்திற்குட்பட்ட சுமார் 5லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. பிஏபி திட்டத்தால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது.

கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் வறட்சியை போக்கவும், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், பரம்பிக்குளம்   ஆழியார் பாசன திட்டம் (பிஏபி), அப்போதைய தமிழக கேரள இரு மாநில அரசு பேச்சுவார்த்தையின் மூலம் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம்   ஆழியார் பாசன திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் அப்பர் ஆழியார், உப்பார் உள்ளிட்ட அணைகள் மேற்கு தொடர்ச்சியில் உள்ளன. இதில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பெரும் பங்கு வகுக்கிறது.  

ஆனைமலையாறு குன்றுகளின் நடுவே, ஆழியார் அணையின் கட்டுமான பணிகள் 1956ம் ஆண்டு துவங்கியது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, அணையிலிருந்து முதன்முறையாக 1961ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பரம்பிக்குளம்   ஆழியார் பாசன திட்டத்தில் முதல் செயலாக்கமான ஆழியார் அணை விளங்குகிறது.  பிஏபி திட்டத்தின் மூலம், மூன்று மலைகளின் நடுவே அமைந்துள்ள ஆழியார் பகுதியில் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் சுற்றளவு முழுவதும் தண்ணீர் தேங்க வசதியாக அணை கட்டப்பட்டது.

ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். மொத்தம் 3,864 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கமுடியும். அப்பர் ஆழியார் அணை மற்றும் சர்க்கார்பதி மின்நிலைய பகுதியிலிருந்தும், நவமலை நீர் மின்நிலைய பகுதியிலிருந்தும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதி மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான வேட்டைக்காரன்புதூர் கால்வாய், பொள்ளாச்சிக் கால்வாய், சேத்துமடை கால்வாய்யோர விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியார் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் சுமார் 45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பசனம் பெறுகிறது.

அதுமட்டுமின்றி பொள்ளாச்சி நகர், கோவை மாநகராட்சியில் குறிச்சி, குனியமுத்தூர், உடுமலைபேட்டை மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.  மேலும் கோவை மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக ஆழியார் அணைப்பகுதி விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூன்று மலைகளின் நடுவே தவழ்வதுபோல், அணை முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது, அதனை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இத்தகைய சிறப்பு மிக்க பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திட்ட தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்,    பிஏபி திட்டம்  உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான வி.கே. பழனிசாமிகவுண்டருக்கு, ஆழியார் அணை பூங்காவின் ஒரு பகுதியில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவு சிலை அமைக்கும் பணியானது ரூ.1 கோடியில் நடைபெற்று வருகிறது.

மேலும்,  பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு ஒன்றிய அரசின் மறைந்த முன்னாள் அமைச்சர் ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ என பெயர் சூட்டப்படுகிறது. இதில், மேல் தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்துக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆழியாறு திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதுடன், இன்றைய இளையதலைமுறையினர் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணரும் பொருட்டு, பரம்பிக்குளம் ஆழியாறு  திட்டத்தை, அன்றைய பிரதமர் ஜவர்கலால்நேரு துவக்கி வைத்த நாளான அக்டோபர் 7ம் தேதி(இன்று) பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம் என அறிவித்து,

ஆண்டுதோறும் இந்நாளில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம், பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மகாராஜா மஹாலில் காலை தொடங்கியது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலை, மஹாராஜா மஹாலில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இன்று (07.10.2022) நடைபெற்ற பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் திரு. காமராஜர், திரு. வி. கே. பழனிசாமி கவுண்டர்,

பாரத ரத்னா திரு. சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே. எல். ராவ் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவராவ் இ.ஆ.ப., அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: