திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மூன்று இடங்களில் 2.6 கி.மீ தூரத்துக்கு உயர்மட்ட பாலம்

* மண் பரிசோதனை பணி தீவிரம்

* 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாராகும்

திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையிலும், அண்ணாசிலை-காந்திமார்கெட்-பாலக்கரை-தலைமை போஸ்ட் ஆபீஸ்- ஜங்ஷன் (6.4 கி.மீ., தூரம்) வரை உயர்மட்டபாலம் மற்றும் போஸ்ட் ஆபீஸ்-கோர்ட் ரவுண்டானா-அரசு தலைமை மருத்துவமனை (2.6 கி.மீ., தூரம்) வரை உயர்மட்டப்பாலம் மற்றும் காவிரி பாலம்-சத்திரம் பஸ் நிலையம்-கலைஞர் அறிவாலம்-குடமுருட்டி ஆறு (2.2 கி.மீ., தூரம்) வரை உயர்மட்டப்பாலம் என மூன்று இடங்களில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருச்சி கோட்டம் அண்ணாசிலை-ஜங்ஷன் மற்றும் போஸ்ட் ஆபீஸ்-அரசு தலைமை மருத்துவமனை வரை என இரண்டு உயர்மட்ட பாலம் பணிகளையும், தமிழக நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள் அலகு) திருச்சி கோட்டம் சார்பில் காவிரி பாலம் - குடமுருட்டி வரையிலான உயர்மட்டம் பாலம் பணியை மேற்கொள்கின்றன. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் கணக்கெடுப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்காக அண்ணாசிலை-ஜங்ஷன் வரை ரூ.2.7 கோடி, போஸ்ட் ஆபீஸ்-அரசு மருத்துவமனை வரை ரூ.1.24 கோடி, காவிரி பாலம்-குடமுருட்டி வரை ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.5.14 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உயர்மட்ட பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்வதற்கான கணக்கெடுப்பு பணிகள், மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்பிக்கப்படும். டிபிஆர் தயாரான பிறகு தான் பாலம் கட்ட எத்தனை கோடி செலவாகும் என தெரியவரும்’ என்றனர். உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுப்பொலிவு பெறும் திருச்சி

*  திருச்சி நகரில் உள்ள பாலக்கரை, புத்தூர் சுரங்கப்பாதைகளுக்கு மேல் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது.

*  9 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையில் இப்பாலம் அமைகிறது.

* பாலம் வரைப்படப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

*  இந்த உயர்மட்ட பாலம் வந்தால் திருச்சியின் தோற்றம் புதுப்பொலிவு பெறுவதோடு, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

*  டிபிஆர் சமர்ப்பிக்கப்பட்ட பின் பாலம் பணிக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: