சென்னையில் திருடி வெளிமாநிலங்களில் விற்ற 57 செல்போன்கள் மீட்பு: போலீசார் நடவடிக்கை

பல்லாவரம்: சென்னையில் திருடி வெளிமாநிலங்களில் விற்கப்பட்ட 57 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் செல்போன் திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், உடனடி நடவடிக்கை எடுக்க பல்லாவரம் காவல் உதவி ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், 5 பேர் அடங்கிய தனிப்படை போலீசார், திருடுபோன செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு நடத்தினர்.  

இதில், திருடுபோன செல்போன்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது. அதன் அடிப்படையில், பல்லாவரம் தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாக சென்று, பல்வேறு நபர்களிடம் இருந்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். இவ்வாறு மொத்தம் 57 செல்போன்கள் இதுவரை மீட்கப்பட்டது.  அதில், குன்றத்தூர் காவல் நிலையத்தில் 33 செல்போன்கள், பல்லாவரம் காவல் நிலையத்தில் 12 செல்போன்கள், சங்கர் நகர் காவல் நிலையத்தில் 12 செல்போன்கள் என மொத்தம் 57 செல்போன்கள் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், காணாமல்போன பல செல்போன்களையும் கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அவையும் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பல்லாவரம் காவல் உதவி ஆணையாளர் ஆரோக்கியரவீந்திரன் தெரிவித்தார். இதனிடையே, தொலைந்துபோன செல்போன்களை பெற்ற உரிமையாளர்கள் கூறுகையில்; தொலைந்து போன எங்களது செல்போன்கள் இனி எங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது என்று தான் நாங்கள் நினைத்து இருந்தோம். ஆனால் பல்லாவரம் போலீசார் துரிதமாக செயல்பட்டு எங்களது காணாமல் போன செல்போன்களை மீட்டுக் கொடுத்துள்ளனர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.

Related Stories: