பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கொள்ளையனின் கால் துண்டானது: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: மின்சார ரயில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணிகளின்  பாக்கெட்டில் இருந்த செல்போனை பறிக்க முயன்ற திருடன் கீழே விழுந்ததில், ரயில் மோதி கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை  செல்லும் மின்சார ரயிலில் செல்லும் பயணிகளிடம், செல்போன் பறிப்பு  சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரயிலின் ஜன்னல் ஓரம்  அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள்,  உறங்கிக்கொண்டு செல்லும் பயணிகளை குறிவைத்து நிறைய திருட்டு சம்பவங்கள்  அரங்கேறி வருகின்றன.

இவ்வாறு திருடுபவர்கள் ரயிலில் பயணித்தபடியோ  அல்லது ரயில் தண்டவாளம் ஓரம் நின்றபடியோ திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். சிக்னலுக்காக ரயில் மெதுவாக செல்லும்போது கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டு, ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விடுகின்றனர். இதனை தடுக்க ரயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இந்த  நிலையில், இந்த வழித்தடத்தில் பயணியின் செல்போன் பறிக்க ரயிலில் ஏறிய திருடன்  தவறி கீழே விழுந்ததில், அவரது கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (எ) அட்டை நவீன் (24). இவர் மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி புறப்பட்ட மின்சார ரயில், கொருக்குப்பேட்டையை நெருங்கியபோது, சிக்னலுக்காக மெதுவாக சென்றுள்ளது. அப்போது, இந்த நவீன் பயணிகளிடம் கைவரிசை காட்ட இந்த ரயிலில் ஏற முயன்றபோது, தவறி கீழே  விழுந்தார். இதில் ரயில் சக்கரத்தில் அவரது இடது கால் சிக்கி துண்டானது. தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், சம்பவ இடத்துக்கு சென்று நவீனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: