இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விளம்பரம் பிரபல நிறுவனங்களின் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக மோசடி

பெரம்பூர்: ஒரு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையை தூண்ட வேண்டும், என்பது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனம். இந்த வசனத்தை பார்த்து சிரித்தவர்கள், ரசித்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. ஆனால் இந்த திரைப்படத்தில் வருவதுபோன்று தற்போது பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எப்படி எல்லாம் ஒரு மனிதனை ஏமாற்ற வேண்டும் என்பதை சக மனிதர்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். அதிக வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனங்களைத் தொடங்கி 500 கோடி ரூபாய், 1000 கோடி ரூபாய் என ஏமாற்றிய பழைய கதையெல்லாம் மாறி தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்து, லேப்டாப்பை திறந்து ஆன்லைனில் அரை மணி நேரம் வேலை செய்து 50 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய் என எளிதாக ஏமாற்றுகின்றனர்.

ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டம் வடக்கிலிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும், ஏமாறுவதற்கு ஒரு கூட்டம் தென் பகுதியில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதும் தயார் நிலையில் உள்ளது, என்பதை தினம் தினம் காவல் நிலையத்தில் குவியும் புகார்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், போலி இணையதளம், போலி பேஸ்புக் ஐடி என தொடர்ச்சியாக ஏமார்ந்து வந்த நமது மக்கள் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏமாற தொடங்கியுள்ளனர். யார் பொருளை விற்கிறார், எந்த பொருள் விற்கப்படுகிறது என்பதை எல்லாம் பார்க்காமல் பிராண்ட் எனப்படும் கம்பெனி பெயரை மட்டும் பார்த்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரம் வெறும் ரூ.20 ஆயிரம் என்றவுடன் உடனடியாக அந்த லிங்கை தொட்டு உள்ளே சென்று பார்த்து உடனடியாக ஆன்லைனில் பணம் கட்டி புக் செய்கின்றனர்.

 

அவ்வாறு, பணம் கட்டியவுடன் குறிப்பிட்ட அந்த லிங்கை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் செயல் இழந்து போகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் நல்ல கம்பெனி பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறி நூதன முறையில் இன்ஸ்டாகிராமில் 2 பேரை அசாமிகள் ஏமாற்றி உள்ளனர். வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (29). திருவான்மியூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் விலை உயர்ந்த கைகடிகாரங்களை ஆர்டர் செய்தார். அதில் முறையே ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரம் என 2 தவணைகளாக ரூ.75 ஆயிரம் முன் பணம் கொடுத்து கை கடிகாரங்களை ஆர்டர் செய்தார். பணம் கட்டிய அடுத்த நிமிடம் குறிப்பிட்ட அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் அந்தப் பக்கத்தை பிரசாந்த் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த பிரசாந்த் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று வியாசர்பாடி 3வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.44 ஆயிரம் பணம் கட்டி லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தார். நல்ல பிராண்ட் லேப்டாப் குறைவான விலையில் வருகிறது என்று உடனடியாக கல்லூரி மாணவர் அதனை புக் செய்தார்.  பணம் செலுத்திய அடுத்த நிமிடம் குறிப்பிட்ட அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் பிளாக் ஆகி விட்டதாகவும், மீண்டும் அதனை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் சதீஷ்குமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகார்கள் மீதும் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இரு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளதால் ஒரே நபர் இருவரையும் ஏமாற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த 2 புகார்களுக்கும் மையக்கரு ஒன்றை மட்டுமே உணர்த்துகிறது. பிரபல கம்பெனியின் பெயரை வைத்து அதிகமான விலையுள்ள பொருளை குறைவான விலையில் கொடுத்தால் மக்கள் உடனடியாக வாங்கி விடுவார்கள் என்ற ரீதியில் இன்ஸ்டாகிராம் பேர்வழிகள் இதனை செய்துள்ளனர். அதற்கு அப்பாவி பொதுமக்களும் பலியாகின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத ஐடிகளில் இருந்து வரும் மலிவான விளம்பரத்தை நம்ப வேண்டாம் என போலீசார் தரப்பில் எவ்வளவோ அறிவுரைகளை வழங்கினாலும் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

*பார்சலில் கைவரிசை

ஆன்லைனில் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று எண்ணி அதனை ஆர்டர் செய்யும் நபர்கள் முதலில் பணம் கட்ட வேண்டாம் என்றும், உங்கள் வீட்டிற்கு பொருள் வந்ததும் பணம் கட்டினால் போதும் என்றும் கூறி சிலர் பொதுமக்களை நம்ப வைக்கின்றனர். அதன்பிறகு உங்களது பார்சல் ஏர்போட்டில் கஷ்டம்சில் உள்ளது. அதனை கிளியர் செய்வதற்கு முன்பணம் கட்ட வேண்டும். அதனை நீங்கள் தான் தர வேண்டும் என்று கூறி ஆர்டர் செய்த பொருளின் விலை ரூ.1 லட்சம் என்றால் 20 சதவீத பணம் அதாவது ரூ.20 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறி அந்த பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

அதன்பிறகு இரண்டு நாளில் பார்சல் வரும் என கூறி இணைப்பை துண்டித்து விடுகின்றனர். ஆனால் எந்த காலத்திலும் அந்த பார்சல் புக் செய்தவர்களின்  வீடுகளுக்கு சென்று சேர்வதில்லை ஆர்டர் எடுத்துக்கொண்டு அதனை டெலிவரி செய்வது போன்று பில் ரெடி செய்து கொண்டு நூதன முறையில் கஷ்டம்ஸ் என்ற பெயரில் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

*விழிப்புணர்வு அவசியம்

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி கூறியதாவது:  ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் முன்பெல்லாம் குறிப்பிட்ட அந்த பிராண்டட் கடைக்கு சென்று வாங்குவோம். கடைகளில் பெரிய அளவில் போலி பொருட்கள் இருக்காது. ஆனால் தற்பொழுது குறிப்பிட்ட அதே பிராண்ட் ஆன்லைனில் குறைவான விலையில் கிடைக்கிறது என்று ஆன்லைனில் சர்ச் செய்தால் பல போலி வெப்சைட்டுகள் வருகின்றன. அதில் சென்று புக் செய்தால் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.

ஆன்லைனில் பொருள் வாங்கும்போது எது போலி எது அசல் என்பதை மக்கள் உணர வேண்டும். மேலும் ஆன்லைனில் ஒரு பொருளை புக் செய்யும்போது பெரிய பிராண்டின் பொருள் குறைவான விலையில் வந்தால் உடனடியாக புக் செய்து நாம் பணத்தை செலுத்தி விடுகிறோம் அவ்வாறு செலுத்தாமல் குறிப்பிட்ட அந்த பிராண்டின் உண்மை தன்மையை ஆறாய வேண்டும். நாம் புக் செய்யும் கம்பெனிகளின் போன் நம்பர் முகவரி அனைத்தையும் சரி பார்த்து அதன் பிறகு பணம் பரிவர்த்தனையை தொடங்க வேண்டும்.

Related Stories: