தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை: எம்எல்ஏ, மேயர், துணை மேயர், கலெக்டர் பங்கேற்பு

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் நேற்று பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை வருவாய் நிர்வாக இணை ஆணையரும், செங்கல்பட்டு மாவட்ட வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ஜான் லூயிஸ் கலந்துகொண்டு, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 35 வார்டுகளில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் கடந்த வடகிழக்கு பருவமழையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறார்கள். பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்து இருக்கிறது, விரைவில் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும் என ஆய்வு நடைபெற்றது. அடையாறு ஓட்டிய பகுதிகளில் போதுமான இயந்திரங்கள் இருக்கிறதா, முகாம்கள் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாடுகள் வராமல் இருப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும், மின்சார துறை, நெடுஞ்சாலை துறை சார்ந்த பணிகள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்தோம்.

போதிய மின்கம்பங்கள், மின் கம்பங்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கிறதா என மின்வரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சாலை பணிகளை 2 வாரங்களுக்குள் முடிக்க நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் கால்வாய்களில் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.முடிச்சூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடையாறு ஆற்றை  விரிவாக்கம் செய்துள்ளோம். மழைக்காலத்திற்கு முன்பு அனைத்து  ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்,  எங்கெல்லாம் கால்வாய்கள் இணைப்பு  இல்லாமல் உள்ளதோ அவற்றை கண்டறிந்து கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என உத்தரவிட்டு உள்ளோம்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றால் அவற்றை உடனடியாக வெளியேற்ற அதற்கு தேவையான இயந்திரங்களுடன் தயார் நிலையில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை  மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி,  தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன்,  காவல்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலைத் துறை,  மின்சாரத்துறை, பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் வாரியத்துறை, மாநகராட்சி  அதிகாரிகள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.        

*கூடுதல் பணியாளர்

சாலையோரம் நடைபெற்று வரும்  கால்வாய் பணிகளையும் 1 அல்லது 2 வாரங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தூய்மை பணியாளர்களை பொருத்தவரை ஒரு சில இடங்களில் கூடுதலாக பணியாளர்கள்  தேவை என மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாமன்ற  உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பணியாளர்கள், பற்றாக்குறையாக உள்ள  பகுதிகளில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க ஆணையருக்கு  தெரிவித்துள்ளோம் விரைவில் அவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

*ஆக்கிரமிப்பு அகற்றம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை என்னென்ன  பணிகள் நடைபெற்று உள்ளது. வரும் காலங்களில் என்னென்ன பணிகள் நடைபெற உள்ளது  என்பது குறித்த விரிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு  தெரிவித்துள்ளோம். எனவே தொடர்ந்து நடைபெறும் பணிகள் குறித்து  கண்காணிக்கப்படும். இதுவரை, ஒட்டுமொத்த தாம்பரம்  மாநகராட்சியில் கடந்த மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நின்ற தாழ்வான  பகுதிகளை கண்டறிந்து அதற்கென புதிதாக ஒரு திட்டம் தீட்டி முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல்  புதிதாக கால்வாய் அமைக்க கண்டறிந்து கால்வாய்கள் அமைத்தது, கால்வாய்களை  தூர் வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்துள்ளோம்.

* ரூ.1000 கோடியில் பணி

நீர்வளத் துறை சார்பில் சென்னையை  ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு மட்டும் தமிழக முதல்வர் கிட்டத்தட்ட ரூ.1000  கோடிக்கு மேல் ஒதுக்கி அந்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.  இப்பணிகளை கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு  இந்த மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அந்த பணிகள் குறித்த ஆய்வும்  நடைபெற்றது.

Related Stories: