தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி பாஜ பிரமுகரின் 9 அலுவலகம் 3 வீடுகளில் போலீஸ் சோதனை: பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை, சேலத்தில் ரூ.1.82 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

சேலம்: தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட சேலம் பாஜ பிரமுகரின் 9 அலுவலகங்கள், 3 வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சேலம் தாதகாப்பட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51), பாஜ பிரமுகரான இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். இந்நிறுவனத்தின் கிளைகளை வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, நீலகிரி, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் 12 மாதங்களுக்கு தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை திரட்டினார்.

இதனை நம்பி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்களாக பணம் செலுத்தியவர்களுக்கு எவ்வித தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். வேலூரை சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சேலம் ஜஸ்ட்வின் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அலுவலகத்தை பூட்டிவிட்டு பாலசுப்பிரமணியன் தப்பினார். இதுபற்றிய புகாரில், சேலம் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியம், அவரது கூட்டாளி சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், திருச்சியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதில், பாலசுப்பிரமணியம், அவரது மகன் வினோத்குமார் ஆகியோர் தன்னிடம் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ரூ.2 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்துவிட்டனர், எனக்கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியம், வினோத்குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, சேலம், வேலூர், திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பாலசுப்பிரமணியம் மீது புகார் கொடுத்தனர். அப்புகார்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, தமிழகம் முழுவதும் பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியம் நடத்திய நிதி நிறுவன அலுவலகங்கள் மற்றும் சேலத்தில் உள்ள அவரது 3 வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில்,  6 கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமரா பதிவுகள், பீரோவில் இருந்த பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரெட்டியூரில் உள்ள  பாலசுப்பிரமணியத்தின் மற்றொரு வீட்டில், எந்த பொருளும் இல்லை. முழுமையாக காலி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான வாழப்பாடி திருமனூரில் உள்ள பூர்வீக வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவரது மைத்துனர் நல்லுசாமி வசிக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தியதோடு, வீட்டில் தீவிரமாக சோதித்தனர். அதில், ரூ.1.82 லட்சம் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனை காலை 8மணி முதல் மாலை 4மணிவரை நடந்தது.

இதேபோல், நீலகிரி, திருச்சி, காரைக்குடி, நாகர்கோவில், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் பாலசுப்பிரமணியத்தின் நிதி நிறுவன கிளை அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இச்சோதனை 9 அலுவலகம், 3 வீடுகளில் நடந்தது.இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சோதனையில் ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். அடுத்தகட்டமாக சேலம் மத்திய சிறையில் உள்ள பாலசுப்பிரமணியத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: