அரவிந்த்சாமி நடித்த ரெண்டகம் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் படத்தை இந்தியாவில் ஓடிடியில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், இந்த படத்தின் கதையை ‘ஜாவா’ என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்தேன். இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில் எனது கதையை தமிழில் ‘ரெண்டகம்’ என்ற படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  மேலும், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: