அமெரிக்கா மீது ஆத்திரம் மேலும் 2 ஏவுகணை வீசி வட கொரியா வாலாட்டம்: தென் கொரியா பதிலடியால் போர் பதற்றம்

சியோல்: வட கொரியா நேற்று மேலும் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1ம் தேதி  2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் கடந்த 4ம் தேதி காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிமீ உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றது.

இதனால், ஜப்பான், தென் கொரியாவுக்கு ஆதரவாக, அமெரிக்கா தனது விமானம் தங்கி போர்க்கப்பலை  அனுப்பி உள்ளது. இது, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நேற்றும் 2 கண்டம் விட்டு கண்டம்  பாயும் ஏவுகணைகளை வீசியது. அதோடு, தென்கொரியா எல்லைக்கு  தனது 12 போர் விமானங்களை அனுப்பியும் மிரட்டியது. அதற்கு பதிலடியாக தென் கொரியாவும் 30 போர் விமானங்களை வடகொரியா எல்லைக்கு அனுப்பியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர்  பதற்றம் நிலவுகிறது.

இந்தியா கண்டனம்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியாவுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா பாதுகாப்பு  கவுன்சிலில் பேசிய இந்திய  பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், ‘ஏவுகணை சோதனைகள் கொரிய பிராந்தியத்திலும்,  வெளி உலகிலும் அமைதி, பாதுகாப்பை பாதிக்கிறது,’ என வடகொரியாவை கண்டித்தார்.

Related Stories: