தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு 24 குழந்தைகள் உட்பட 35 பேர் பலி: முன்னாள் போலீஸ் அதிகாரி வெறிச்செயல்

பாங்காங்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு பணிக்கு செல்லும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பகல் நேரத்தில் விட்டுச்செல்வார்கள். நேற்று உணவு இடைவேளையின்போது காப்பகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த 8 மாத கர்ப்பிணி ஆசிரியை உட்பட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த குழந்தைகள் அலறி கூச்சலிட்டபடி சிதறி ஓடினர். அப்போது, குழந்தைகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 19 ஆண் குழந்தைகள், 3 பெண்கள் என 22 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திவிட்டு காப்பகத்தில் இருந்து காரில் தப்பிசென்ற அந்த மர்மநபர் காரில் சென்றபடியே பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.  இதில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்   காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இறந்தவர்களின்   சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 35 பேர் உயிரிழந்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ‘துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன்னாள் காவல்துறை அதிகாரியாவார். அவர் கடந்த ஆண்டு தான் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்பது தெரியவந்துள்ளது.  

* மனைவி, குழந்தையை கொன்று தற்கொலை

காப்பகத்தில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் காவல்துறை அதிகாரி, சாலையில் சென்றவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு சென்ற அவர் தனது மனைவி, குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும்  தற்கொலை செய்துகொண்டுள்ளார். எதற்காக இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: