இந்தியாவுடன் முதல் ஒருநாள் போட்டி: கிளாஸன், மில்லர் அதிரடியில் தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு

லக்னோ: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஹெய்ன்ரிச் கிளாஸன் - டேவிட் மில்லர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அபாரமாக ரன் குவித்தது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டி, மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியதால் தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜானிமன் மலான், குயின்டன் டி காக் இருவரும் தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. ஜானிமன் மலான் 22 ரன்னில் வெளியேற, பார்மில் இல்லாத கேப்டன் பவுமா 8 ரன் மட்டுமே எடுத்து ஷர்துல் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் சுழலில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். டி காக் 48 ரன் (54 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பிஷ்னோய் சுழலில் பெவிலியன் திரும்ப, தென் ஆப்ரிக்கா 22.2 ஓவரில் 110 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஹெய்ன்ரிச் கிளாஸன் - டேவிட் மில்லர் இணைந்து இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் முயற்சித்த எந்த வியூகமும் பலனளிக்கவில்லை. இருவரும் அரை சதம் விளாசி அசத்த, தென் ஆப்ரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. கிளாஸன் 74 ரன் (65 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), மில்லர் 75 ரன்னுடன் (63 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 2, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 40 ஓவரில் 250 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் தவான், ஷுப்மன் கில் இருவரும் துரத்தலை தொடங்கினர். கில் 3 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேற, தவான் 4 ரன் எடுத்து பார்னெல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். இந்தியா 5.1 ஓவரில் 8 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ருதுராஜ் கெயிக்வாட் - இஷான் கிஷன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

Related Stories: