மகளிர் ஆசிய கோப்பை டி20 தாய்லாந்து அணியிடம் பாக். அதிர்ச்சி தோல்வி

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், கற்றுக்குட்டியான தாய்லாந்து அணியிடம் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்தது. சிட்ரா அமீன் அதிகபட்சமாக 56 ரன் (64 பந்து, 6 பவுண்டரி), முனீபா அலி 15, நிடா தார் 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அலியா ரியாஸ் 10, ஒமைமா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய தாய்லாந்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை நத்தகன் சாந்தம் 61 ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தாய்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் இன்று இந்திய அணியின் சவாலை எதிர்கொள்கிறது.வங்கதேசம் அசத்தல்: ஆசிய கோப்பையில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - மலேசியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. முர்ஷிதா கதுன் 56 ரன், கேப்டன் நிகர் சுல்தானா 53 ரன் விளாசினர்.

அடுத்து 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா 18.5 ஓவரில் 41 ரன் மட்டுமே எடுத்து 88 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் யாருமே ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதுடன்,  5 வீராங்கனைகள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். நிகர் சுல்தானா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Related Stories: