ஏட்டிக்கு போட்டி பேரணி தாக்கரே 1 லட்சம் ஷிண்டே 2 லட்சம்: போலீஸ் புள்ளி விவரம்

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்  தாக்கரே நடத்திய ஏட்டிக்கு போட்டி  தசரா பேரணிகளில், ஷிண்டேவுக்கு 2 லட்சம் பேரும், தாக்கரேவுக்கு ஒரு லட்சம் பேரும் திரண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாைவ உடைத்து, பாஜ ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுத்து வருகிறார். உண்மையான சிவசேனா தாங்கள் தான் என்பதை நிரூபிக்க, இருவரும் தங்களின் தொண்டர்கள் பலத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் காட்டி வருகின்றனர். இதனால், சிவசேனா கட்சி ஷிண்டே அணி, தாக்கரே அணி பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், உத்தவ் தரப்பில் சிவாஜி பார்க்கிலும், ஷிண்டே தரப்பில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சிலும் நேற்று முன்தினம் தசரா பேரணி நடத்தப்பட்டது.

இதில், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசினர். இந்த பேரணியில் தங்களுக்குதான் அதிக தொண்டர்கள் கூடியதாக இருவரும் மார்தட்டி வருகின்றனர். இந்நிலையில், 2 அணிகளிலும் யார் பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற புள்ளி விவரத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். ஷிண்டேவுக்கு 2 லட்சம் பேரும், உத்தவுக்கு ஒரு லட்சம் பேரும் திரண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால், தங்கள் அணிக்குதான் தொண்டர்கள் பலம் இருப்பதாக ஷிண்டே தரப்பு பெருமையுடன் கூறி வருகிறது. இருப்பினும், ஷிண்டே பேசத் தொடங்கியதும் கூட்டத்தில் 50 சதவீதம் பேர் மைதானத்தில் இருந்து வெளியேறி விட்டதாக உத்தவ் தரப்பு கூறி வருகிறது.

* சிவாஜி பார்க்கில் அதிகபட்சமாக 80 ஆயிரம் பேரும், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் ஒரு லட்சம் பேர் மட்டுமே கூட முடியுமாம்.

Related Stories: