தலைவர், பொது செயலாளர், பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் 2வது முறையாக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் குவியும் நிர்வாகிகள்

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்கிறார். அவர் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெற்றது. தொடர்ந்து திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் உள்பட மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைகுழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இப்பதவிகளுக்கு போட்டியிடுவோர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட) 5 பேர் முன்மொழிய, 5 பேர் வழி மொழிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினுக்காக வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

தொடர்ந்து 9ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு நடக்கிறது. அப்போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. இதனால், தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார்.

இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஞாயிறு என்றாலே சூரியன் தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய்-ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம். தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம்’’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது 9ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு தீர்மானம்,  துணைப் பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: