காம்பியாவில் 66 குழந்தைகள் பலி இந்திய மருந்து காரணமா? ஒன்றிய அரசு விசாரணை

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்திய மருந்துகள்தான் காரணமா என்பது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து பலியாயின. இது பற்றி ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், அந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்துதான்   உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது. உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், ‘‘குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது,’’ என்றார். மேலும், இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியானாவை சேர்ந்த, ‘மெய்டென் மருந்து நிறுவனம்’ தயாரித்துள்ள இந்த மருந்துகளில் அங்கீகரிக்கப்படாத, தடை செய்யப்பட்ட கலவைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. குழந்தைகள்  இறப்புக்கு இதுவே காரணமாக இருக்கலாம் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. புரோ மெத்தசைன், கோபெக்ஸ்மாலின், மேக் ஆப், மா கிரிப் இன் கோல்ட் ஆகிய 4 மருந்துகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்து நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்றுள்ளது. மேலும், இந்த நிறுவனம்  இந்த மருந்துகளை காம்பியாவுக்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட மருந்துகள் மண்டல ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள் 2 நாளில் வந்து விடும்,’ என தெரிவித்துள்ளன.

* இந்தியாவில் சப்ளை இல்லை  

அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காம்பியாவில் விநியோகிக்கப்பட்ட மெய்டன்  நிறுவனத்தின் மருந்துகள், இந்தியாவில் விற்கப்படவில்லை. அந்த மருந்துகளை இந்தியாவில் அது சப்ளை செய்யவும் இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன,’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: