நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்த இடத்தில் இருந்தே நில ஆவணம் பார்க்கலாம்: ஒன்றிய அரசு விரைவில் அமல்

புதுடெல்லி: ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் மற்ற மாநிலங்களில் நிலங்களை வாங்கும்போது, அந்த மாநில மொழிகளில் உள்ள ஆவணங்களை படிப்பதில் சிரமம் இருக்கிறது. இதற்கு, மொழி பெரிய தடையாக உள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்க, நில உரிமை ஆவணங்களை நாடு முழுவதிலும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் பார்ப்பதற்கும், அவற்றை படித்து புரிந்து கொள்வதற்குமான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் 22 மொழிகளில் இந்த ஆவணங்களை மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, ஒன்றிய அரசு நில வளங்கள் துறை இணை செயலாளர் சோன்மோனி போரா கூறுகையில், ‘‘இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. நில ஆவணங்களில் மொழி தடைக்கல்லாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு நில ஆவணங்களை மொழியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில்  ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது அறிமுகமாகும். ஒரே நேரத்தில் 22 மொழிகளிலும்  அறிமுகம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில்  நில ஆவணங்களை மொழியாக்கம் செய்ய மாநில அரசுகளிடம் கேட்டு கொள்ளப்படும். மேலும், மாநிலங்கள் 3 மொழிகளை விருப்ப மொழியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டத்துக்கு ரூ.11 கோடி செலவாகும். ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: