கேரளாவில் பஸ்கள் மோதல் பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் பலி: ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது சோகம்

பாலக்காடு: கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது பஸ்கள் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே  வெட்டிக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் ஊட்டிக்கு தனியார் பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர். அதில், 26 மாணவர்கள், 16 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என 49 பேர் இருந்தனர். பஸ்சை எர்ணாகுளத்தை சேர்ந்த டிரைவர் ஜோமோன் (42) ஓட்டினார். நள்ளிரவில் பாலக்காடு அருகே வாளையார் வடக்கஞ்சேரியில் சென்றபோது, முன்னால் சென்ற காரை ஜோமோன் முந்த முயன்றார். அப்போது, காருக்கு முன்பாக  கோயம்புத்தூரை நோக்கி 40 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதினார். இதனால், பஸ் பள்ளத்தில் உருண்டு நொறுங்கியது. இதில், ஜோஸ் (15), கிறிஸ்வின்டர் போன்தாமஸ்  (15), தியா ராஜேஷ் (15), அஞ்சனா அஜித் (17), இமானுவல் (17) ஆகிய மாணவ, மாணவிகளும், உடற்கல்வி ஆசிரியர் விஷ்ணு (33), அரசு பஸ்சில் பயணித்த 3 பேர் உட்பட 9 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* முர்மு, மோடி இரங்கல்

விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

* உயர் நீதிமன்றம் ஆவேசம்

விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள கேரள உயர் நீதிமன்றம், நேற்று காலை இதை விசாரித்தது. அப்போது, ‘சுற்றுலா வாகனங்களில் அதிக ஒளியை உமிழும் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதை பின்பற்றவில்லை. விபத்தை ஏற்படுத்திய பஸ் மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. அதற்கு தகுதி சான்றிதழ் கொடுத்தது யார்? விபத்து தொடர்பாக போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் விளக்கமளிக்க வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* தப்பிய டிரைவர் கைது

சுற்றுலா பஸ்சை ஓட்டிய டிரைவர் ஜோமோன் காலில் எலும்பு முறிந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து காரில் தப்பிய அவரையும், அவருக்கு உதவிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: