சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் ஆதரவு திரட்டினார்

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் இளஞ்செழியன், திருவான்மியூர் மனோகர், தி.நகர் ராம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து சசி தரூர் சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கட்சியின் ஒற்றுமைக்கு எனது பெரும் பங்கை அளிப்பேன். கட்சி பொறுப்புகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்குவேன். காங்கிரஸ் கட்சி என்பது தேர்தலில் போட்டியிடக்கூடிய சம்பிரதாய கட்சியாக மட்டுமில்லாமல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேடிச்சென்று செய்து தரும் சிறந்த கட்சியாக மாற்றி காட்டுவேன். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுபடுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் என பல விதங்களில் ஆதரவு கேட்டு வருகிறேன். ராகுல்காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: