திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பரிதாப பலி: மேலும் 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள்.   வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில்  விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த சேவாலயத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கியுள்ளனர். மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படும். பண்டிகை நாட்களில் வெளி நபர்களிடம் இருந்து பெறப்படும் உணவு வழங்கப்படும். சேவாலயத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். காலாண்டு விடுமுறை என்பதால் சில மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் 20க்கும் குறைவானவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த மாணவர்களுக்கு ரசம் சாதம் மற்றும் லட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். பின்னர் நள்ளிரவு மற்றும் அதிகாலை என ஒருவர் பின் ஒருவராக மாணவர்களுக்கு வாந்தியும், சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. சிலர் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேவாலய ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் 10ம் வகுப்பு மாணவன் மாதேஷ் (15), 6ம் வகுப்பு மாணவன் பாபு (13), 4ம் வகுப்பு மாணவன் ஆதிஷ் (8) ஆகிய 3 பேர் பரிதாபமாக பலியாகினர். வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் காந்த், ஜெயராமன், மணிகண்டன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் கோட்டாட்சியர் பண்டரிநாதன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்தனர். சிகிச்சை முறைகள் குறித்து கலெக்டர் வினீத் கேட்டறிந்தார். காப்பகத்தில் இரவு உணவு உண்ட பின்னர்தான் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த உணவு கெட்டுப்போனதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மருத்துவர் ஆலோசனை பெற்றிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நேற்று முன்தினம் முதலே உணவில்தான் பிரச்னை என அனுமானத்தின் மூலம் தெரிய வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் 3 பேரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். இது காலம் கடந்த வருத்தமான சூழ்நிலையாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,  சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை அனுப்பியுள்ளார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம்  நலம் விசாரித்து ஆய்வு மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

* நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கூறுகையில், சேவாலயத்தில் இரவு உணவு சாப்பிட்ட 14 சிறுவர்கள் மற்றும் ஒரு காவலாளிக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாப்பிட்ட உணவு மாதிரி, சிகிச்சை பெறுபவர்களின் சிறுநீர், மலம் ஆகியவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். காப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். திருப்பூர் கமிஷனர் பிரபாகரன் கூறுகையில், சேவாலய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: