அரசியல்ரீதியாக ‘ஒன் சைட் கேம்’ ஆடுகிறது எய்ம்சுக்கு சுற்றுச்சுவர்கூட இல்லை திட்டங்களுக்கு நிதி குறைப்பு: ஒன்றிய அரசு மீது நிதியமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை: ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்கிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளான இலவசங்கள் எந்த வகையில் வழங்கப்படுகிறது. அதற்கான நிதி போன்றவை குறித்து தெளிவான விளக்கங்களுடன் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

இது குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள்தான்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. தற்போது கூறும் கருத்து முரண்பாடாக இருக்கிறது. இதற்கு எங்கள் கட்சியின் தலைமை பதில் அளிக்கும்.

பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ்  ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. மதுரையில் இன்னமும் சுற்றுச்சுவர் கூட முழுமையாக கட்டப்படவில்லை. அரசியல்ரீதியாக ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்கிறதே தவிர, மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று ஒன்றிய அரசு  நினைக்கிறது.

ஒன்றிய அரசு ஒரு புதிய திட்டத்திற்கு தனது பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதம் என அறிவிக்கிறது. பின்னர் அதே திட்டத்தை ஓராண்டு கழித்து 40 சதவீதம் ஒன்றிய அரசு வழங்கும். மீதமுள்ள 60 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அதே திட்டத்தை 25 சதவீதம் ஒன்றிய  அரசு வழங்கும். மீதமுள்ள 75 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறும். பிரதமர் பெயரில் அத்திட்டத்தை வகுத்து வைத்துவிட்டு, மாநில அரசு அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியான நிலை அல்ல. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிச்சயமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் ஒன்றிய அரசு சில மாநிலங்கள் அறிக்கை தரவில்லை என்ற காரணத்தால் காலதாமதப்படுத்துகிறது. மழைக்காலம், மற்ற மாநிலங்களில் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: