இரவில் வீடு திரும்பும்போது பியூட்டி பார்லர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன்: சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பு

வில்லியனூர்: பியூட்டி பார்லரில் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் (27 வயது), நகர பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 8 மணியளவில் நத்தமேடு பஸ்நிறுத்தம் வந்து இறங்கி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இருட்டான பகுதியில் நின்றிருந்த 16 வயது சிறுவன் அவரை பின் தொடர்ந்துள்ளார். அவரை இளம்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன், அருகிலுள்ள கம்பளிக்காரன்குப்பம் கிராமத்துக்கு செல்வதாக கூறவே, அதை நம்பி உடன் நடந்துள்ளார். சிறிது தூரம் சென்றதும், அவன் இளம்பெண் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அவர் கூச்சலிடவே அவ்வழியாக பைக்கில் சென்றவர்கள் நிறுத்தி பார்த்தனர். உடனே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சிறுவன் தப்பி ஓடிவிட்டான். நள்ளிரவே மங்கலம் காவல் நிலையம் சென்ற அந்த இளம்பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் அடையாளம் தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தி அரியாங்குப்பம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: