ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: செல்போனில் உருக்கமான ஸ்டேட்டஸ்

துவரங்குறிச்சி: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, அதிக பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக்கொள்வதாக ஸ்டேட்டஸ் வைத்து, திருச்சி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் மலையாண்டி பட்டியை சேர்ந்தவர் ரவி. மணப்பாறை பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் சந்தோஷ் (22). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த இவருக்கு, ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் உண்டு. கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான இவர், வீட்டிலிருந்து பணத்தை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து சென்று விளையாட்டில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுதபூஜை அன்று வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரத்தை காணவில்லை என சந்தோஷிடம் பெற்றோர் செல்போனில் பேசி கேட்டுள்ளனர். அதற்கு அவர், மோதிரத்துடன் வருகிறேன் என கோபமாக பேசியுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9.50 மணியளவில் “என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான். அதில் நான் அடிமையாகி அதிக பணத்தை இழந்ததால் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்.” என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சந்தோஷை உடனடியாக ெதாடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அதன் பின்னர் அவரை பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தோஷை தேடி வந்த நிலையில், நேற்று காலை அமையபுரம் என்ற இடத்தில் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன்  ரம்மிக்கு அடிமையான இன்ஜினியரிங் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: