அவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள் ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

இடைப்பாடி: ஓபிஎஸ்சுடன் ஒருங்கிணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடி பயணியர் மாளிகையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டம் இயற்ற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதை வேகமாக நிறைவேற்றினால், உயிர்களை காப்பாற்றலாம். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தர உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கேட்டுள்ளோம். காவிரியில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் அசுத்தம் ஆகிறது. எனவே, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்ற, பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிமுக வலிமையாக இருக்கின்ற கட்சி. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு, சிலரின் தூண்டுதலின் பேரில் அதிமுகவை  பிளக்கவோ, உடைக்கவோ, முடக்கவோ நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை முடிந்தவுடன், பொதுச்  செயலாளர் தேர்தல் கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். மதுரையில் உங்களுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டதே  என்ற கேள்விக்கு, ‘உண்மைக்கு புறம்பாக, திட்டமிட்டு, பத்திரிகையாளர்கள் கேட்க  வேண்டும் என்பதற்காக, அதுபோன்று சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்கள்’ என்றார்.

ஒருங்கிணைந்து  செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு,  ‘அவருடைய பிரதான கட்சிக்கு அவர்தான் பொறுப்பாளர், எப்படி கட்சியை நடத்துகிறார் என்று பாருங்கள். அடுத்தவரை நுழைய வைப்பவர் விசுவாசமாக இருப்பாரா? அதற்கு இங்கு இடமில்லை. அவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள். அவருடன்  (ஓபிஎஸ்சுடன்) ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை. இந்த கேள்விக்கு  ஊடகங்களின் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறேன்’ என்றார்.

Related Stories: