சாலையை சீரமைத்து பஸ்களை இயக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலையை சீரமைத்து, மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உரத்துப்பட்டி, கள்ளங்களப்பட்டி, மிண்ணமலைப்பட்டி, கீழவண்ணாயிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த சாலை கடந்த 24 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. உரிய பராமிப்பில்லாததால் இந்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சில பகுதிகள்  வனத்துறை பகுதிக்குள் வருவதாக கூறி சாலை அமைக்கும் பணியை கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர். பின்னர் வனத்துறைக்குள் வரும் பகுதியை விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் துண்டு துண்டாக சாலைகள் அமைக்கப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளிலேயே மழையால் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் இந்த வழியாக இயக்கப்பட்ட அரசு மற்றும் மினி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘மதுரை, திண்டுக்கல் பகுதியில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் மக்கள் இந்த சாலை வழியாக சென்று வந்தனர். கொட்டாம்பட்டியிலிருந்து பொன்னமராவதிக்கு காலை 6.30, 7.30, மதியம் 1 மணி மற்றும் மாலை நேரங்களில் டவுன் பஸ் மற்றும் மினி பஸ் இயக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், விவசாயகள் பேருந்து சேவையை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வருவதற்கும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது தலைச்சுமையாக பொருட்களை 5 கிமீ தூரம் கரடு முரடான சாலையில் பொதுமக்கள் தூக்கிச் செல்ல வேண்டி இருப்பதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: