பருவமழை முடியும்வரை அந்தந்த வார்டுகளில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

பெரம்பூர்: திருவிக மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை பருவமழை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பருவமழை முடியும்வரை அவரவர் பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பருவமழையை எவ்விதம் எதிர்கொள்வது என 6,7,8 ஆகிய 3 மண்டலங்களுக்கும் சேர்த்து, நேற்று மாலை திருவிக நகர் மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன், மண்டல அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சென்னையில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள், மின்வாரிய பணிகள், நெடுஞ்சாலை துறை பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனினும், வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் நிலையில், அப்பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன, அதன்மூலம் பொதுமக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில இடங்களில் 20 சதவீத பணிகள் முடிந்து முழுமை பெறும் நிலையில் உள்ளது. அவை எந்தெந்த இடம் என்பதை அதிகாரிகள் முன்கூட்டி தெரிவித்தால், கூடுதல் பணியாளர்களை வைத்து அப்பணிகளை விரைந்து முடிக்கலாம். அதேபோல் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும், அப்பகுதியை உடனடியாக சீர்செய்ய வேண்டும். மின்கம்பங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும், மழைக் காலத்தில் மக்களை தங்கவைப்பதற்கான மாநகராட்சி மண்டபங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வாட்ஸ்-அப் குழு அமைத்து, அதில் அனைத்து துறை அதிகாரிகளும் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்தின்போது அந்தந்த வார்டு பகுதிகளில் மாமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மழை வெள்ள காலத்தில் மக்களுக்கு மனக்கசப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். மின்மோட்டார் உள்பட அனைத்து இயந்திரங்களையும் தயார்நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

Related Stories: