காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்க கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஹரியானவை சேர்ந்த Maiden மருந்தியல் நிறுவனம் தயாரித்த promethazine oral solution, kofexmalin, MaKOFF,  MaGrip n Cold ஆகிய மருந்துகள் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தரத்தின் படி இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 4 இருமல் மருந்துகளில் Diethylene Glycol மற்றும் ethylene Glycol ஆகிய ரசாயனங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் இந்த மருந்துகள் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்த மருந்துகள் காரணமாக  இருக்க கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தரமற்ற இருமல் மருந்துகள் தற்போது காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், வேறுநாடுகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்துவருவதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், இந்த மருந்துகளை பயன்படுதத்துவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி, சிறுநீர் கழிக்க முடியாத நிலை, தலைவலி, மனநிலை பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை நேரிடுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் உடனடி விசாரணையை தொடங்கியுள்ளது.

Related Stories: