×

இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், ஏற்றுமதியில் 3-வதாகவும், தொழில் முதலீட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது: செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் அமைச்சர் பேச்சு

ப்ராக்: இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், ஏற்றுமதியில் மூன்றாவதாகவும், தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகவும் உள்ளதால் செக் குடியரசு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் குறு, சிறு
மற்றும் நடுத்தரத்  தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தார்.    

தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் படி, குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும்  MSV  கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். செக் குடியரசு நாட்டில் (5.10.2022) அன்று நடைபெற்ற  MSV  கண்காட்சியின் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்புரை ஆற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:
செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV சர்வதேச தொழில் கண்காட்சி 2022ல் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க  மகிழ்ச்சியடைகிறேன். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் MSV  கண்காட்சியானது முதன்மையானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்தவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.   

இந்தியாவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது  100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில்  வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் என ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி , ஜவுளி, தோல், விமானம் தயாரிப்பு, பாதுகாப்பு, மருந்து போன்ற துறைகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான MSME நிறுவனங்கள் உள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகத்தில் உள்ள MSME  நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செக் குடியரசு மற்றும் தமிழ்நாடு பல பொதுவான தொழில்கள் உள்ள நிலையில் குறிப்பாக வாகன உற்பத்தி  தொழில், கனரக தொழில், பாதுகாப்பு மற்றும் விமானம் தயாரிப்பு துறையில் பல வணிக வாய்ப்புகள் உள்ளன. Hyundai, BMW, Renault மற்றும் Nissan போன்ற முக்கிய  வாகன தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளததால் தமிழ்நாடு இந்தியாவின் வாகன உற்பத்தியில் மையமாக திகழ்கின்றது.  

இதுபோன்ற பெரும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் உள்ள  MSME நிறுவனங்கள் உதிரி பாகங்கள் வழங்குகின்றன. இதனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, ஒரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. இந்தியாவின் கனரக மின் உபகரணங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8 சதவீதம் ஆகும்.

விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைக்கு 21.9 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட தொழில் பெரும் வழிதடம் 2019-ல் தொடங்கப்பட்டது.

இந்தத் துறைகளைத் தவிர்த்து, ஜவுளி, தோல், மின்னனு பொருட்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக திகழ்வதால் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கின்றேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Tags : Tamil Nadu ,India ,Minister ,Czech Republic International Fair , Tamil Nadu 2nd Largest Economic State, Industrial Investment, Czech Republic International Exhibition
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...