தேக்கடியில் ஜாலி படகு சவாரி; சுற்றுலாப்பயணிகள் திரண்டனர்

கூடலூர்: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடி ஏரியில் படகுச்சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, நேச்சர் வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம். அதனால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

தேக்கடி ஏரியில் தற்போது கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழக மற்றும் கேரள வனத்துறையினரின் 6 படகுகள் சவாரி செல்கிறது. படகுச்சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவுக் கட்டணம் ரூ.70 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.25 அடியாக உள்ளது. இதனால் தேக்கடி ஏரி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தற்போது  ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையை  முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஏரியில் படகுச்சவாரி செல்ல ஆர்வம் காட்டுவதால் தேக்கடி படகுத்துறையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 

Related Stories: