4 பேருக்கு பன்றி காய்ச்சல், புதுவையில் 393 குழந்தைகளுக்கு காய்ச்சல்; சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி:  புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் (ப்ளு) வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் 393 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் - 355, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் - 20, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் - 18 என மொத்தம் 393 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர். இதில் ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை - 29, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி - 3, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை - 7 என 39 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 111, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 16, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 14 என 141 குழந்தைகள் மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 101 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நேற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் குழந்தைகள் யாருமில்லை. தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் ஒரு குழந்தை, புதுவை அரசு பொது மருத்துவமனையில் 2 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: