×

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் உள்ளன; இதனை சரி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்.

இது ஏற்க முடியாதது ஆகும். வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை. அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது.

இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி. மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை  ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


Tags : Tamil Nadu ,Anbumani ,Ramadoss , Dear Ramadoss, Tamilnadu, hospital, shortage of medicine
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...