திருச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வாங்கி செல்லும் விவசாயிகள்: 80 சதவீதம் பேருக்கு விற்பனை

திருச்சி: தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு கடந்த 2021-2022 ம் ஆண்டில் பாரம்பரிய நெல் விதைகளை பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ₹25 லட்சம் ரமதிப்பில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள 33 அரசு விதை பண்ணைகளில் சுமார் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தி செய்தனர். அதில் கடந்த ஆண்டு தமிழக அரசு, பாரம்பரிய நெல் விதைகளான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி என்ற இரண்டு வகையான நெல் விதைகளை கூட்டுபண்ணை திட்டத்தின் கீழ் அரசு பயிரிட்டது.

அதில் நல்ல விளைச்சல் கிடைத்ததால், இந்தாண்டு அவற்றை தமிழக விவசாயிகளுக்கு கொடுத்து பயிரிட வேண்டும் என்று ஊக்கப்படுத்தி உள்ளது. எனவே இந்தாண்டு 2022-2023 நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு திட்டத்தை அரசு விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தி அந்த திட்டத்தின் மூலம் கிச்சிலி சம்பா, தூய மல்லி என்ற 2 ரகங்களையும் தந்துள்ளது. அதில், தமிழகத்தில் முதல் 5 மாவட்டங்களில் திருச்சியும் இடம் பிடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதம் பேருக்கு இந்த பாரம்பரிய நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12,645 கிலோ நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நெல் ரகம் 1 கிலோ 25 ரூபாய்க்கு அரசு விலை நிர்ணயம் செய்து, அதை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக 1 கிலோவிற்கு ரூ.12.50க்கு விற்பனை செய்து வருகிறது. மேலும் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20கிலோ நெல் வழங்கப்படுகிறது. மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது இந்த நெல் ரகத்தை விவசாயிகளும் ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர். இன்னும் 20 சதவீத விவசாயிகளுக்கு இந்த நெல் ரகங்கள் சென்றடையாமல் உள்ளது. அவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய முயற்சியில் வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அறிமுகப்படுத்திய ஆத்தூர் கிச்சிலி சம்பா அரிசி பொதுவாக 130 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். அதேபோல் மழை வௌ்ளத்திலும் ஓரளவு தாக்குப்பிடித்து சாய்த்தாலும், நெல்லுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இது வௌ்ளையாகவும், சன்ன ரகமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தூயமல்லி என்று சொல்லப்படும நெல் ரகம் பூச்சி மற்றும் நோயை எதிர்த்து வளரும் திறன் கொண்டது. இதில் அரிசி மற்றும் தவிடும் சத்து மிகுந்ததாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 1125 கிலோ உற்பத்தி கிடைக்கும். இதுவும் 135 நாள் பயிர் தான், பாரம்பரிய நெல் ரகத்தில் முதலிடம் பிடித்தது இந்த தூயமல்லி ரகம் மட்டும் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பாரம்பரியம்மிக்க இரகங்களை விவசாயிகள் பயிரிட்டாலும் , தற்போது அவற்றை அறுவடை செய்து எப்படி விற்க போகிறோம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு, குறுவை உள்ளிட்ட நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் பாரம்பரிய நெல் உற்பத்தியை அரசே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதம் பேருக்கு இந்த பாரம்பரிய நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12,645 கிலோ நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: