ரூ.8 லட்சத்தில் புதிய தார்சாலை துவக்கம்: திமுக சேர்மன் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: நெடுங்குன்றம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திமுக சேர்மன் உதயா கருணாகரன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், மப்பேடுபுத்தூர், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 8வது வார்டான ஈஸ்வரன் கோயில் குறுக்கு தெரு, பஜனை கோயில் தெருவில் உள்ள சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உருமாறியிருந்தன.

தங்களது பகுதியில் சாலைகளை சீரமைத்து, புதிதாக தரமான தார்சாலையை அமைத்து தரவேண்டும் என காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரனிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் 8வது வார்டு பகுதியில் புதிதாக தார்சாலைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், 8வது வார்டு பகுதியில் நேற்று மாலை புதிய தார்சாலை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா, முன்னாள் தலைவர் சோ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராமானுஜன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் பங்கேற்று, ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 8-வது வார்டு உறுப்பினர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: