20 ஆண்டுக்கு பின் வெற்றிலையூரணி கண்மாய் நிரம்பியும் ஒரு போகம் நெல் சாகுபடி கூட நடக்கவில்லை: விவசாயிகள் கவலை

சிவகாசி: வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி கண்மாய் 20 ஆண்டுக்கு பின் கனமழையால் நிரம்பி மறுகால் சென்றும் ஒரு போகம் கூட நெல் சாகுபடி நடைபெறாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே கண்மாயில் வேலி முட்களை அகற்றுவதுடன், பாசன கால்வாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் கடந்த டிச.21ல் கனமழை பெய்தது. இந்த மழைக்கு வெம்பக்கோட்டையில் உள்ள 17 ஒன்றிய கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றது. வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணியில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெற்றிலையூரணி, கீழதாயில்பட்டி, ஆனைக்குட்டம் கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி ஆயரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக கண்மாய் நிரம்பவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நீர் வரத்து கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கண்மாய் பாசன விவசாயிகளின் நிலங்கள் தரிசாக கிடந்தன. மேலும் கருவேல முட்கள் அடர்ந்து முளைத்து வனம் போல் பாசன நிலங்கள் மாறின. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமரத்து பணியில் கண்மாய் ரூ.20 லட்சம் செலவில் ஆழப்படுத்தப்பட்டது. ஆனால் கண்மாய் பாசன கால்வாய் தூர்வாரப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி வெள்ள நீர் கழுங்கு வழியாக மறுகால் செல்கிறது.

சுமார் 1000 கனஅடி நீர் வீணாக சென்றது. இந்த கண்மாயில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் முத்தால்நாயக்கன் பட்டி கண்மாய் சென்று அங்கிருந்து ைவப்பாறு வழியாக இருக்கன்குடி அணைக்கு செல்லும். அங்கிருந்து வேம்பாறு, வைப்பாறு அடைந்து கடலில் கலக்கும். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுக்கு பின் கண்மாய் நிரம்பியும் பாசன கால்வாய்கள் தூர்ந்து கிடந்ததால் ஒரு போகம் கூட முழுமையாக நெல் பாசம் செய்ய முடியவில்லை வயல் நிலங்களில் வேலி முட்கள் வனம் போல் முளைத்திருந்ததாலும், பாசன கால்வாய் தூர்வாரபடாததாலும் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் பாசன பணிகள் நடைபெற ஏதுவாக கண்மாயில் உள்ள வேலி முட்களை அகற்றுவதுடன், பாசன கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: