சிறுவாணி அணை சீரமைப்பு, திட்டப்பணிகளுக்காக மாநகராட்சியிடம் ரூ.310 கோடி எதிர்பார்க்கும் குடிநீர் வாரியம்: தாமதத்தால் கடன் அதிகரிப்பு

கோவை: கோவை சிறுவாணி அணை சீரமைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக 310 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என குடிநீர் வாரியம் எதிர்பார்த்துள்ளது. கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிறுவாணி அணை குடிநீர் பராமரிப்பு, வினியோகம் தொடர்பாக இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக சிறுவாணி அணை பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளுக்காக அதிக தொகை தேவைப்படுகிறது. உடனடியாக 47 கோடி ரூபாய் வழங்கினால் திட்ட பணிகள் துவக்க முடியும்.

அணையின் நீர் தேக்க பகுதியில் அதிக நீரை தேக்க முடியாது. அணையின் பக்க சுவர் பலம் இழந்து வருகிறது. நீர் கசிவு அதிகமானால் நீர் தேக்க அளவை குறைத்து விடுவோம் என எச்சரித்துள்ளது. அணையை பலமாக்க தேவையான திட்ட பணிகளை நடத்த வேண்டும். ஆனால் இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்திடம் போதுமான நிதியில்லை என தெரிகிறது. கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் பெறப்பட்டு மாநகராட்சிக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சிறுவாணி குடிநீர் மூலமாக கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கிய குடிநீர் வாரியத்திற்கு உரிய கட்டணத்தை தரவில்லை.

ஆண்டிற்கு ஒரிரு கோடி ரூபாய் வழங்கி வருவதாக தெரிகிறது. இதுவரை 310 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்த தொகைக்கான வட்டியை கூட மாநகராட்சி தரவில்லை. இந்த நிலையில் எப்படி சிறுவாணி அணை பராமரிப்பு பணிகளை நடத்த முடியும்? என குடிநீர் வடிகால் வாரியத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டாக, குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு திட்ட பணிகளுக்கு அதிக  தொகையை கடனாக வாங்கி வருகிறது. பில்லூர் 3வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டங்கள் போன்றவற்றுக்காக கடன் பெறப்பட்டுள்ளது. சிறுவாணி மட்டுமின்றி பில்லூர், பவானி உள்ளிட்ட குடிநீர் திட்டங்களிலும் கடன் அதிகமாகி வருகிறது. குடிநீர் கட்டண பாக்கியை விரைவாக வழங்கவேண்டும் என குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன், மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘குடிநீர் வினியோகம் மிகவும் அவசியமானது. பொதுமக்கள் குடிநீர் கட்டண தொகையை வழங்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். ஆனால் குடிநீர் வாரியத்திற்கு கட்டண  தொகையை அதிகளவு பாக்கி வைத்திருக்கிறார்கள். மாநகராட்சியால் நாங்கள் திட்டப்பணிகளுக்கு அதிகளவு கடன் வாங்க வேண்டியிருக்கிறது. மின் வாரியத்திற்கு நாங்கள் அதிக தொகை செலவிட வேண்டியிருக்கிறது. அணையில் நீர் எடுக்க, வினியோகிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் தரவேண்டியிருக்கிறது. இதை மாநகராட்சியினர் புரிந்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நாங்கள் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினால் மாநகராட்சி பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அதை செய்யாமல் மாநகராட்சியிடம் முறையாக கேட்டு வருகிறோம்.

அணை பராமரிப்பு பணி நடத்தாமல் இருந்தால் நீர் கசிவு அதிகமாகிவிடும். எனவே அணையின் பாதுகாப்பு கருதி, பணி நடத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் கட்டண பாக்கி தர வேண்டும்’’ என்றனர். இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ‘‘சிறுவாணி குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக அலுவலக கடிதம் எதுவும் வரவில்லை. வந்தால் அது தொடர்பாக தெரிவிக்கலாம்’’ என்றார். குடிநீர் வினியோகம் மிகவும் அவசியமானது. பொதுமக்கள் குடிநீர் கட்டண தொகையை வழங்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். ஆனால் குடிநீர் வாரியத்திற்கு கட்டண  தொகையை அதிகளவு பாக்கி வைத்திருக்கிறார்கள்.

Related Stories: