குன்றத்தூர் அருகே ஒரே கயிற்றில் மகன், தந்தை தூக்கிட்டு தற்கொலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மனமுடைந்த தந்தையும், சிறிது நேரத்தில் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

குன்றத்தூர் அருகே பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (40). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் தினேஷ்குமார், நவீன்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் நவீன்குமார், அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் தனது தந்தையின் செல்போனில் நவீன்குமார் வீடியோ கேம் விளையாடியபடி இருந்திருக்கிறார். இதை தந்தை சுந்தர் கண்டித்து, மகனுக்கு செல்போன் தருவதை தவிர்த்து வந்திருக்கிறார். இதில் மனமுடைந்த நவீன்குமார், நேற்று மாலை வீட்டுக்குள் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய தந்தை சுந்தர், மகன் இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுதபடி, சமையலறைக்கு சென்று, தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டார். பின்னர், மகன் தூக்கில் தொங்கிய அதே கயிற்றில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு தற்கொலை செய்து கொண்ட மகன், தந்தை ஆகிய இருவரின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே வீட்டில் தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: