அமெரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் கொடூர கொலை: 8 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலியான பரிதாபம்.. பழத்தோட்டத்தில் இருந்து உடல்கள் மீட்பு..!!

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர், கலிஃபோர்னியாவில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப்சிங், அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், 8 மாத பெண் குழந்தை மற்றும் நெருங்கிய உறவினர் அமர்ந்தீப்சிங் ஆகியோருடன் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை, மெர்ஸிட் பகுதியில் உள்ள அவரது நிறுவனத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் அவர்கள் நான்கு பேரையும் கடத்தி சென்றனர். கடந்த 4 நாட்களாக கலிஃபோர்னியா காவல்துறை, கடத்தப்பட்ட நால்வரையும் தீவிரமாக தேடி வந்தது.

இந்நிலையில் ஜஸ்தீப்சிங்கின் கிரெடிட் கார்ட் பயன்படுத்தப்பட்ட தகவலை அறிந்து தீவிர விசாரணை செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் ஜீசஸ் மேனிவேல் சாகடா என்பவரை சுற்றி வலைத்தன. அப்போது அவர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, போலீஸ் அவரை மெர்ஸிட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளன . இந்நிலையில் போலீசாரை தொடர்புகொண்ட ஜீசஸ் மேனிவேலின் குடும்பத்தினர், கடத்தப்பட்ட நான்கு பேரையும் கொன்றுவிட்டதாக ஜீசஸ் மேனிவேல் தெரிவித்ததாக கூறினர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட கூடுதல் விசாரணைக்குப் பிறகு, கலிஃபோர்னியாவில் இண்டியானா சாலையில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் இருந்து 4 பேரின் சடலங்களை மெர்ஸிட் மாவட்ட காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடத்தல் மற்றும் கொலைகளில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் மெர்ஸிட் காவல்துறையினர், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். 8 மாத குழந்தை உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது கலிஃபோர்னியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்டுள்ள ஜஸ்தீப்சிங் குடும்பத்தினர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓஷியாபூரை பூர்வீகமாக கொண்டவர்களாவர். அவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலின்போது பதிவான பரபரப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: