தொடர் விடுமுறை எதிரொலி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊட்டி:  ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டியை விடுமுறை, தமிழகத்தில் ஆயுத பூஜை விடுமுறை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர். மழையின்றி வெயிலும் இன்றி மிதமான கால நிலை நிலவுகிறது.

சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன.  அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் பயணிகள் க்கள் கூட்டம்  நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி ஊட்டியில் உள்ள முக்கிய கடை வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பூங்கா சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், கமர்சியல் சாலை, பூங்கா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஊட்டியில் கடந்த இரு வாரங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டாவது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, அரசு தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சியை போன்று 15 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு அலங்கார மேடைகளில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் 10 நாட்கள் விடுமுறை என்பதால், இந்த வாரம் முழுக்க ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: