தர்மபுரி ரயில் நிலையம் மூலம் ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் சரக்குகள் பரிமாற்றம்; 500 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு

தர்மபுரி: தர்மபுரி ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் விதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3.50 லட்சம் டன் சரக்குகள் இங்கு பரிமாற்றம் செய்யப்படுவதால், 500 தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம், கடந்த 1906 ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில், மீட்டர் கேஜாக அமைக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம்-பெங்களூரு மார்க்கமாக, தினசரி 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக 2 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். கடந்த 1974ம் ஆண்டு, இந்த ரயில்நிலையம் வழியாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அப்போது சரக்குகளை கையாளுவதற்காக தனியாக ரயில்பாதை அமைக்கப்பட்டது.

தற்போது 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 ஆண்டுகளுக்கு முன், மீட்டர்கேஜ் ரயில்பாதையில், மலைப்பாதையின் வழியாக  சரக்குகள் கொண்டு வருவதற்கு சிரமாக இருந்தது.

நீராவி இன்ஜின் மூலம் ஒரு பெட்டியில் (1 வேகன்) தர்மபுரி ரயில்நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு வரப்பட்டது. மாரண்ட அள்ளியை சேர்ந்த ஒரு வியாபாரி, வடமாநிலத்தில் இருந்து பருப்பு, துடைப்பம், ஆரியம் ஆகியவற்றை தருவித்து இறக்கி, மாவட்டம் முழுவதும் சப்ளை செய்தார். இரண்டு நாளைக்கு ஒரு ரயில் பெட்டியில் சரக்கு வரும். இது பின்னர் 12 பெட்டிகளாகவும், நாளடைவில் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. அதன்பின் டீசல் இன்ஜின் பொருத்திய சரக்கு ரயில், 42 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.  தர்மபுரி ரயில் நிலையத்தற்கு, சரக்கு ரயில் மூலம் டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளும், ஆந்திராவில் இருந்து சிமெண்ட் மூட்டைகளும், குஜராத், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோதுமை மூட்டைகளும் வருகின்றன. தொடக்கத்தில் மிக குறைந்த அளவில் சரக்குகள் கையாளப்பட்டன.

தற்போது ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் சரக்குகள் இறக்கி, ஏற்றி கையாளப்படுகின்றன. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்த சரக்கு ரயில்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், மூட்டை தூக்கும் சுமைப்பணி தொழிலாளர்கள், நெல் அரவை ஆலை உரிமையாளர், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இதுகுறித்து சரக்கு முனையத்தில் உள்ள தொழிலாளர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூரில் வசதிகளுடன் கூடிய ரயில் நிலையம் உள்ளன. இதில் தர்மபுரி ரயில்நிலையத்தில் தான் சரக்குகள் ஏற்றி, இறக்கி கையாளப்படுகின்றன. இந்த ரயில்நிலையத்தில் 5 டிராக்குகள் உள்ளன. இதில் 2 டிராக்குகளில் சரக்கு ரயில்களை நிறுத்தி சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகிறது.

சரக்குகளை ஏற்றி, இறக்கும் இடத்தில் குடிநீர், கழிப்பறை, இரவில் மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும். மழைக்காலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் போது பொருட்கள் நனையாமல் இருக்க மேற்கூரை அமைத்து தரவேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூரு கோட்டத்தின் கட்டுப்பாட்டில், தர்மபுரி ரயில்நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது மின்சார ரயில் மூலம் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சரக்குகள் விரைவாக வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 3.50 லட்சம் டன் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் சரக்கு கையாளும் இடத்தில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,’ என்றனர்.

Related Stories: